அண்ணாமலை அவதூறாகப் பேசிய வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு..!

கடந்த 2022 அக்டோபர் மாதம் ‘பேசு தமிழா பேசு’ என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் முன்னிலையாக, அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் முன்னிலையாக விலக்கு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து, அண்ணாமலையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *