குட் நியூஸ்..! தமிழகத்திலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 34 சிறப்பு ரயில் – அண்ணாமலை ட்வீட்..!
அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து இன்று முதல் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்திலிருந்து, அயோத்தி ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது என தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.