தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானிக்கு பாரத ரத்னா அறிவிப்பு..! பிரதமர் மோடி புகழாரம்..!

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்துக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார்.ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும், மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது ஆற்றியப் பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளமையையும் உறுதி செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் இந்திய வேளாண் துறை மிகவும் பின்தங்கி இருந்தது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன.குறிப்பாக, 1960-ம் ஆண்டு முதல் 1980ம் கால கட்டங்களில் இந்தியாவின் உணவுத்தேவைக்கு அண்டை நாடுகளிடம் கையேந்தக் கூடிய நிலையை மாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

உணவுத் தேவையில் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப் புரட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.அப்போது மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுகால கட்டத்திலும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியபோது உணவுத் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப்புரட்சி என்ற இந்த திட்டம் வகுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் உணவு உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட் டது. அதனை முன்னெடுத்து சென்றவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அந்த பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், அறக்கட்டளை மூலமாகவும், வேளாண்துறைக்கு பெரும் பங்காற்றினார்.சர்வதேச நெல் ஆராய்ச்சி இயக்குனராக இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேசன் மூலம் தொடர்ந்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்.

அவரது சொந்த ஊர் கும்பகோணம். 1925-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி பிறந்தார்.சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் முறையே விவசாயத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்தார்.1960 மற்றும் 1970-களில் இந்தியாவில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்களிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.அவரது பணியை மெச்சத்தக்க வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பணிக்காக உலக உணவு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர உலகின் நுற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.இந்திய விஞ்ஞானிகளில் இந்த அளவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பிரபலம் எம்.எஸ்.சுவாமிநாதன் என்று குறிப்பிடத்தக்கது.1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக இருந்தார். 1979 முதல் 1980 வரை இந்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் முதன்மை செயலாளராகவும் இருந்தார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் 1982 முதல் 1988 வரை பணியாற்றினார். உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், கிராமப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.வேளாண் ஆராய்ச்சிக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடைசி வரை சேவையாற்றி வந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *