ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்?
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. இதுவரையில் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படாத நிலையில், 22ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
துபாயில் நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டரான நியூசிலாந்தைச் சேர்ந்த டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டி வரை நியூசிலாந்து வருவதற்கு காரணமாக இருந்தார். இதன் காரணமாக பவுலர் மற்றும் பேட்ஸ்மேனான டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கத்தில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தான் மிட்செலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதே போன்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலும் விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்லது.
மிட்செல்லிற்கு ஏற்பட்ட காயம் தீவிரமாக இருப்பதால் அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்படும் வீரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் காயம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆனால், கடந்த சீசனில் அவர் 2 போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். பவுலிங்கில் ஒரு ஓவர் மட்டுமே வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் காயம் அடைந்துள்ளார். அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.