2.3KW பேட்டரி கொண்ட ஸ்கூட்டரோட விலை ரூ. 80 ஆயிரம்தானா! இப்ப புக் பண்ணா அடுத்த மாசமே உங்க கைகளுக்கு வந்திரும்!
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV)-யும் ஒன்றாகும். இந்தியாவில் டாப் 10 எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த நிறுவனமே இந்தியாவில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
2.3 KW பேட்டரி பேக் கொண்ட அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு ரூ. 79,999 மட்டுமே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்தியாவில் இந்தமாதிரியான ஓர் பேட்டரி பேக்கில் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் நம்மால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எல்எக்ஸ்எஸ் 2.0 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரத்தையும், உறுதித் தன்மையையும் ஆராய்வதற்காக அதனை மிகப் பெரிய சோதனையோட்டங்களுக்கு நிறுவனம் உட்படுத்தி இருக்கின்றது. மிக முக்கியமாக சுமார் 1.25 லட்சம் கிமீ தூரத்திற்கு இயக்கி அவ்வாகனம் சோதனைச் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சோதனையோட்டத்தின்போது அந்த வாகனம் சிறிதும் சிக்கல்களைச் சந்திக்கவில்லை என கூறப்படுகின்றது.
எனவே நீண்ட தூர பயணம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு உகந்த வாகனமாக லெக்ட்ரிக்ஸ் எல்எக்ஸ்எஸ் 2.0 இருக்கும் என கருதப்படுகின்றது. இந்த நிலையிலேயே லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனம் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுதம் செய்து வைத்திருக்கின்றது.
எல்எக்ஸ்எஸ் 2.0 எனும் பெயரிலேயே அந்த வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதில், ஏற்கனவே கூறியதைப் போல 2.3 KW பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 98 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.
அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் அல்லது டீலர்கள் வாயிலாக புக் செய்துக் கொள்ள முடியும். மேலும், அடுத்த மாதம் முதல் எல்எக்ஸ்எஸ் 2.0 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி வழங்கவும் லெக்ட்ரிக் இவி திட்டமிட்டு இருக்கின்றது.
தங்களுடைய இந்த வாகனமே மூன்று விதமான தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இந்தியாவின் மின்சார வாகனம் என லெக்ட்ரிக்ஸ் இவி புகழாரம் சூடியிருக்கின்றது. சரியான ரேஞ்ஜ், சரியான விலை மற்றும் சரியான குவாலிட்டி ஆகியவற்றை இந்த வாகனம் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
லெக்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு கணிசமான அளவில் நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 10 ஆயிரத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திற்கு இருக்கின்றனர். இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தன்னுடைய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எல்எக்ஸ்எஸ் 2.0-வை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
ஆண், பெண் என இருபாலரும் இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, இல்லத்தரசிகள் சந்தைக்கு செல்ல, பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்ல ஏதுவான வாகனமாக இது இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனத்தின் வேகம் மற்றும் பிற முக்கிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.