டிராகன் பழத்தில் கோடிகளை அள்ளும் இளைஞன்.. வறட்சியிலும் வருமானமாம்..!
இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் வறட்சிக்கு பேர் போனது. பெரிய அளவில் நிலம் இருந்தாலும் வறட்சி விவசாயத்தில் காரணமாக வருமானம் ஈட்ட முடியாது. ஆனால் வறண்ட பூமியில் டிராகன் பழங்களை விளைவித்து கோடிகளில் வருவாய் ஈட்டுகிறார் ஒரு இளைஞர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாபூரை சேர்ந்த மகேஷ் அசாபேவுக்கு சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம். எனவே சோலாபூரில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பயின்றார்.
பின்னர் அதே துறையில் எம் டெக் முடித்தார். அப்போது நாளிதழ் ஒன்றில் டிராகன் பழம் குறித்த கட்டுரையை வாசித்தார். அப்போது , நம்ம ஊரில் ஏன் இதை விளைவிக்க கூடாது என்ற யோசனை வந்தது.
வறட்சியிலும் வளரும் டிராகன் பழம்: டிராகன் பழத்தை பொறுத்த வரை அதற்கு பெருமளவில் தண்ணீர் தேவைப்படாது. குறைந்த தண்ணீரிலே வளரும் தன்மை கொண்டது.
எனவே இது வறண்ட மாநிலங்களுக்கு உகந்தது. மகேஷ் அசாபே தன்னுடைய தந்தையிடம் இந்த யோசனையை தெரிவித்து, குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 9,000 டிராகன் மரக்கன்றுகளை நட்டார்.
ஒரு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வருமானம்: மரக்கன்றுகளை வைத்த முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் பழம் விளைந்தது. இதன் மூலம் அவருக்கு கிடைத்த வருமானம் ரூ.5 லட்சம்.
அதுவே இரண்டாவது ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 10 டன்கள் பழம், ரூ.10 லட்சம் வருமானம் என உயர்ந்தது. எனவே அவர் 20 ஏக்கர் நிலம் வாங்கி அதில் டிராகன் பழ விவசாயம் செய்து வருகிறார்.
தொழில் விரிவாக்கம்: தற்போது 20 ஏக்கர்களில் டிராகன் பழங்களிலேயே பல வகையான கன்றுகளை நட்டு விளைச்சல் பார்த்து வருகிறார் மகேஷ் அசாபே, அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹோல் சேல் பழக்கடைகள் தான் இவர்களின் வாடிக்கையாளர்கள். ருக்மினி ஃபார்ம்ஸ் அண்ட் நர்சரி என்ற பெயரில் டிராகன் பழம் மரக்கன்றுகளை விற்பனை செய்து வருகிறார்.
மொத்தமாக ஓராண்டில் டிராகன் பழங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டுகிறார் மகேஷ் அசாபே.
டிராகன் பழங்கள் சத்து நிறைந்தவை என மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.எனவே இந்த தொழிலின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறுகிறார்.
விவசாயம் செய்ய வேண்டும் , வறட்சியும் வளரக்கூடிய பயிராக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மகேஷின் வழியை பின்பற்றலாம்.