திருத்தணியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்… அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு…!!
தமிழக பா.ஜ.க கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கி 90 நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
அவருடைய அடுத்தக்கட்ட பயணம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து என் மண் என் மக்கள் மக்கள் சந்திப்பு நடை பயணத்தை அவர் தொடங்கினார். அண்ணாமலைக்கு பேனர்கள், கொடி கம்பங்கள், வாழை தோரணங்கள் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்கால் குதியை, கேரள சண்டி மேளம், பம்பை உடுக்கை மேள தாளங்கள் முழங்க விமர்சையாக வரவேற்பு அளிக்கபப்ட்டது.
அவருக்கு பா.ஜ.க வினர் முருகன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கப்பட்டது. ஏராளமான பா.ஜ.கவினர் மத்தியில் அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், மா.பொ.சி சாலையில் அண்ணாமலை தனது நடைப் பயணத்தை தொடங்கினார். அப்போது சாலையில் இருபுறமும் கூடி மக்கள் மலர்தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிறகு பிரசார வாகனத்திலிருந்து பேசிய அவர், “ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட என் மண் என் மக்கள் பாத யாத்திரை மூலம் பா.ஜ.க கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், தி.மு.க செய்யும் ஜாதி அரசியல், குடும்ப அரசியல் குறித்து கடுமையாக அவர் விமர்சனம் செய்தார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தி.மு.க கட்சியின் ரிசர்வ் வங்கி என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று சாடினார்.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக திருத்தணி சி.எஸ்.ஐ., தூய மாதா மத்தேயு தேவாலயத்தில் அண்ணாமலை வழிபாடு நடத்தினர். அவருக்கு தேவாலயம் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கபப்ட்டது. முன்னதாக ‘என் மண் என் மக்கள்’ நடைப் பயணத்தை கடந்த மாதம் தருமபுரியில் அண்ணாமலை மேற்கொண்டார். அங்குள்ள பொம்மிடி தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்தில் வழிபாடு நடந்த முயன்றார்.
அப்போது அங்கிருந்த சிலர் அண்ணாமலை உள்ளேவரக்கூடாது என்று கூறி கண்டனம் தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் கண்டனம் தெரிவித்தவர்களை கட்டுப்படுத்தி, அண்ணாமலையை மாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தால் அவர் திருத்தணி சி.எஸ்.ஐ., தூய மாதா மத்தேயு தேவாலயத்துக்கு சென்றபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் அதுபோன்று எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. மாறாக அண்ணாமலைக்கு தேவாலயத்தின் நிர்வாகிகளும் மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை அண்ணாமலையிடம் தெரிவித்தனர். பலரும் முண்டியடித்துக் கொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.