பிரித்தானிய பிரதமர் ஒருவரால் நீடிக்கும் ரஷ்ய – உக்ரைன் போர்: பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின்
உக்ரைன் தரப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அப்போதே போரை முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன் என்று இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்
ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 716 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஊடகவியலாளரான Tucker Carlson என்பவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேர்காணல் ஒன்றை முன்னெடுத்தார்.
இந்த நேர்காணலில் தான், போர் தொடர்பில் பல முதன்மையான கருத்துகளை புடின் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களுக்கு முன்னரே, போரை தாம் முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்றும், உக்ரைன் தரப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருந்ததாகும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முன்னாள் பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜோன்சன் உக்ரைன் தரப்புடன் முன்னெடுத்த ஒப்பந்தம், அனைத்து முடிவுகளையும் தகர்த்ததாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இறுதி முடிவுக்கு வந்ததாகவும், ஆனால் போரிஸ் ஜோன்சன் அளித்த நெருக்கடியால், உக்ரைன் தரப்பு கடைசி நொடியில் பின் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் ஆளும் கட்சி தலைவர் Davyd Arakhamia துருக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அதன் பின்னர் போரிஸ் ஜோன்சன் அளித்த நெருக்கடியால் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டதாகவும், இதை அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் என்றும் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் காரணமாக
ரஷ்யாவை போரில் வெல்ல வேண்டும் என்று உக்ரைனுக்கு போரிஸ் ஜோன்சன் நெருக்கடி அளித்ததாகவும் புடின் வெளிப்படுத்தியுள்ளார். அதுவரை ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் ஈடுகட்டப்படும் என உக்ரைனுக்கு உறுதி அளித்திருந்ததாகவும் புடின் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் போரிஸ் ஜோன்சன் காரணமாக அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது என்று புடின் குறிப்பிட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இருதரப்பு ஒப்புதலுடன் போர் முடிவுக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் பிரித்தானியா இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்துவிட்டது என்றார்.
இப்போது போரிஸ் ஜோன்சன் எங்கே? போர் இன்னமும் நீடிக்கிறது என்றார் விளாடிமிர் புடின். அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உக்ரைனை மிக மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதாக புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2022 ஏப்ரல் மாதம் போரிஸ் ஜோன்சன் உக்ரைனுக்கு புறப்பட்டதே, இருதரப்பு ஒப்பந்தங்களை முறியடிக்கும் நோக்கத்தில் தான் என ரஷ்யா ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது என்றார் புடின்.
அப்போதே ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால், ரஷ்யா தனது படைகளை திரும்ப பெற்றிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரை இத்தனை நாட்களாக நீட்டிக்கொண்டு செல்வதில் தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்ட புடின், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் போர் இன்னமும் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.