சரண் சிங்கிற்கு பாரத ரத்னா: பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த ஆர்.எல்.டி. – இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்துள்ளதால் இயல்பாகவே பொதுமக்களிடம் ஏற்படும் அதிருப்தி, எதிர்கட்சிகளின் கூட்டணி, ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளின் வெளியேற்றம் உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது.

அதேசமயம், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை வலுவிழக்க செய்யும் முயற்சிகளிலும் பாஜக இறங்கியுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் தனது கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும் என அறிவித்துள்ளார். இருப்பினும், பாஜகவை கடுமையாக எதிர்த்துள்ள அவர், இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், தேர்தலுக்கு பின்னர் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாபில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு மற்றொரு அடியாக, உத்தரப்பிரதேசத்தின் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி தற்போது பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளது.

ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெயந்த் சிங். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான, மத்திய அமைச்சராக இருந்த அஜித் சிங்கின் மகன்தான் இந்த ஜெயந்த் சிங். ஜனதாதளம் கட்சியில் இருந்து பிரிந்து, 1996ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை அஜித் சிங் உருவாக்கினார். அஜித் சிங்கின் மறைவுக்கு பின்னர், அக்கட்சியின் தலைவராக அவரது மகன் ஜெயந்த் சிங் உள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருதி வழங்குவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, பாஜகவுடனான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் கூட்டணியை சரண் சிங்கின் பேரனும், அக்கட்சியின் தலைவருமான ஜெயந்த் சிங் உறுதி படுத்தியுள்ளார்.

பாஜகவுடனான, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மற்றும் பிஜ்னோர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி போட்டியிடும் என தெரிகிறது. அதுதவிர, அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில், குறிப்பாக ஜாட் சமூகத்தினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறும் பொருட்டு, எதிர்ப்பு கிளம்பாத வண்ணம், அனைத்து விஷயங்களிலும் பாஜக கவனம் செலுத்துகிறது. ஜாட் பிரச்சினையைத் தவிர, பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் தாக்கத்தை குறைக்க ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி பாஜகவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி தற்போது பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்த ஜெயந்த் சிங், தேசத்தின் துடிப்பை பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளதாக புகழாரம் சூடினார். இது வரை எந்த கட்சியும் செய்ய முடியாததை மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனது தாத்தாவும், மறைந்த முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் இணைந்தார். அதேபோல், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *