ஜேர்மனி உக்ரைன் என இரு நாடுகளிலும் உதவிகள் பெறும் உக்ரைனியர்கள்: உக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
ஜேர்மனியில் வாழும் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனி செய்யும் நிதி உதவியை, தங்களிடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
இரு நாடுகளிலும் உதவிகள் பெறும் உக்ரைனியர்கள்
ஜேர்மனிக்கு அகதிகளாகச் சென்றுள்ள உக்ரைனியர்களில் சிலர், இரண்டு நாடுகளின் அரசுகளிடமுமிருந்து நிதி உதவி பெறுவதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ள ஜெலன்ஸ்கி, ஜேர்மனிக்குச் செல்லும்போதே சிலர் உக்ரைன் வங்கிகளிலிருந்த தங்கள் மொத்தப் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே, ஜேர்மனியில் வாழும் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனி செய்யும் நிதி உதவியை, தங்களிடம் கொடுத்தால், யார் யார் இரண்டு நாடுகளிடமுமிருந்து நிதி உதவி பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்படி நிதி உதவி வழங்க வசதியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜேர்மனி மறுப்பு
ஆனால், அப்படிச் செய்யமுடியாது என ஜேர்மனி மறுத்துவிட்டது. Margret Böwe என்னும் சமூக உதவிகள் துறை சார் நபர் கூறும்போது, ஜெலன்ஸ்கியின் யோசனையை அமுல்படுத்துவது ஜேர்மன் சட்டப்படி சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
இது ஜேர்மனியில் மட்டும் வழங்கப்படும் நிதி உதவி என்று கூறியுள்ள அவர், வெளிநாடுகளில் வாழும் ஜேர்மானியர்களுக்குக் கூட இந்த நிதி உதவி கிடையாது என்று கூறியுள்ளார்.
அத்துடன், சிலர் இரண்டு நாடுகளிடமுமிருந்து நிதி உதவி பெறுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், உக்ரைனியர்கள் உதவி கோரி விண்ணப்பிக்கும்போதே, அவர்கள் உக்ரைனில் வேறு ஏதாவது உதவி பெறுகிறார்களா என்பதை சோதித்த பின்னரே அவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது என்றார்.
மேலும், பெடரல் வேலைவாய்ப்பு அலுவலகமும், உக்ரைனியர்கள் வேண்டுமென்றே மோசடி செய்கிறார்கள் என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும், விடயம் என்னவென்றால், உக்ரைனுக்குச் செல்லும் முன்பும், ஜேர்மனிக்குத் திரும்பிய பின்பும், தாங்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அது குறித்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது சில அகதிகளுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.