தினமும் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
நடைபயிற்சி
ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சி என்று நீங்கள் தொடங்க இருந்தால் நடைபயிற்சி சிறந்த தெரிவாக இருக்கும்.
ஆரோக்கியமான இதயம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்காக ஒரு நாளைக்கு குறைந்தது 10000 அடிகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நடைபயிற்சி பல்வேறு நன்மைகளை கொடுக்கும் நிலையில், சாப்பிட்ட பின்பு சிறிது நடைபயிற்சி மேற்கொண்டால் செரிமானத்தை மேம்படுத்தும்.
நடைபயிற்சியிலும் சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடைபயிற்சியின் போது தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கு தெரிந்துகொள்வோம்.
தவிர்க்க வேண்டிய தவறுகள்
நடைபயிற்சி போது காலணிகளை சரியானதாக தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தசை, முழங்கால் மற்றும் கணுக்கால் பிரச்சினை ஏற்படும். சில தருணத்தில் காலில் காயம், வலியும் ஏற்படும்.
அதே போன்று சரியான தோரணையை பின்பற்ற வேண்டும். கால்களை மட்டுமின்றி முதுகு மற்றும் தோள்பட்டையின் தோரணை அவசியமாகும். நடைபயிற்சியின் போது தோள்களை அகலமாகவும், முதுகை நேராகவும் வைத்து நடக்கவும்.
நடைபயிற்சிக்கு முன்பு முறையான வார்ம் அப் செய்ய வேண்டுமாம்… முடிந்த பின்பு உடல் குளிர்விக்கவும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். வார்ம் அப் தசைகளை தளர்த்த உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் உடற்பயிற்சிகள் மற்றும் நீட்டிப்புகளுக்கு தசைகளை தயார்படுத்துகிறது. மறுபுறம், கூல்-டவுன் தசை வலியைக் குறைக்க உதவுகிறது, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
கையின் அசைவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கைகளை இறுக்கமாகவும், பக்கவாட்டாகவும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இது வேகத்தை குறைத்து உடலின் சமநிலையை சீர்குலைக்கிறது. நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கைகளின் அசைவு அவசியமானது. நடக்கும்போது கை சரியான முறையில் முன்னும் பின்னும் அசைப்பது முக்கியம்.