ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர்… கனிமொழி பகிர்ந்த வீடியோ ட்விட்டரில் வைரல்..!
மத்திய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அடுத்த நாள் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது எனக்கூறி கர்நாடகா, தமிழ்நாடு, கேரள அரசுகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி அப்போதைய மத்திய அரசை விமர்சித்துப் பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர் என தலைப்பிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் மோடி, குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு குஜராத் அரசு திருப்பிக் கொடுப்பது ரூ.8,000 கோடி. ரூ.10,000 கோடி. ரூ.12,000 கோடி.
குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?மத்திய அரசிடம் நிதியைப் பெற குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.