2024-ல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் 5 எலெக்ட்ரிக் கார்கள்… மாடல்கள் இதோ
நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த 2024 ஆம் ஆண்டு டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர்கள் என ஏராளமான EV வாகனங்கள் நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில், EV ஃபோர் வீலர் செக்மென்ட்டில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டில் தங்களது பல புதிய பல EV-க்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள 5 புதிய மின்சார வாகனங்கள் குறித்து டாடா ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்கள், EV விற்பனையை மற்றொரு உச்சநிலைக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் என தெரிகிறது. நடப்பாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 5 எலெக்ட்ரிக் கார்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
டாடா கர்வ்வ் ஈவி (Tata Curvv EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் கார்களில் இது முக்கியமான மாடலாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த EV அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா மோட்டார்ஸின் நான்காவது எலெக்ட்ரிக் காராக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்த மாடல் Punch EV-உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே EV பிளாட்ஃபார்மால் ஆதரிக்கப்படும். இது 4,308 மிமீ நீளம், 1,810 மிமீ அகலம், 1,630 மிமீ உயரம் மற்றும் 2,560 மிமீ வீல்பேஸ், 422 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டிருக்கும். டாடாவின் Curvv எலெக்ட்ரிக் எஸ்யூவி-யை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரை மைலேஜ் கொடுக்க கூடியதாக அறிமுகமாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டாடா ஹாரியர் ஈ.வி (Tata Harrier EV): சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை பெற்ற அதன் ஃபிளாக்ஷிப் மாடலான Harrier எஸ்யூவி-யின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட Harrier EV, கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது. Gen 2 EV ஆர்க்கிடெக்ச்சரில் பில்ட் செய்யப்பட்ட ஹாரியர் ஈ.வி-யானது V2L மற்றும் V2V சார்ஜிங் வசதிகளுடன் வரும். அடுத்த சில மாதங்களில் அறிமுகமாக உள்ள ஹாரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன் சமீபத்தில் சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் SUV-யின் ரேஞ்ச், செயல்திறன் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதுவரை அதிகம் வெளியாகவில்லை.
மாருதி சுசுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): நாட்டின் மிகபெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகிக்கு இந்த 2024 ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும். ஏனென்றால் நிறுவனம் தனது முதல் மின்சார கார் eVX-ஐ உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட eVX எலெக்ட்ரிக் எஸ்யூவி-யானது, அடுத்த ஆண்டு முதல் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டரின் குஜராத் ஆலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இதன் அறிமுகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 550 கிமீ தூரம் வரை செல்லும். இதில் 60kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): தனது XUV700 அடிப்படையிலான புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் அதன் EV லைன்அப்-ஐ மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. XUV.e8 மஹிந்திராவின் இரண்டாவது எலெக்ட்ரிக் காராக நாட்டில் அறிமுகமாகும். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனைடெட் கிங்டமில் நடைபெற்ற நிகழ்வின்போது வரவிருக்கும் ஐந்து எலெக்ட்ரிக் எஸ்யூவி-க்களை மஹிந்திரா காட்சிப்படுத்தியது. Born எலெக்ட்ரிக் பிராண்டின் கீழ் வெளியிடப்பட உள்ள புதிய XUV.e8 டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஆல்-வீல் டிரைவ் டெக்னலாஜியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நிறுவனம் குறைந்தப்பட்சம் 60kWh பேட்டரி பேக்கை வழங்க வாய்ப்புள்ளது, மேலும் லெவல் 2 ADAS, 5G கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களையும் கொடுக்கலாம்.
ஸ்கோடா என்யாக் (Skoda Enyaq): ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நமது நெற்றிக்கு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-ல் தனது புதிய Enyaq EV-ஐ காட்சிப்படுத்தியது. நடப்பாண்டின் முதல் பாதியில் இந்தியாவில் Enyaq அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 282bhp என்ற அளவிலான அதிகப்பட்ச ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய rear axle பொருத்தப்பட்ட சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. மேலும் இது 0-100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடும். இதில் 82kWh யூனிட் பேட்டரி பேக் கொடுக்கப்படும். இதனை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய 28 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 565கிமீ தூரம் வரை செல்ல கூடிய ரேஞ்சை கொண்டிருக்கும்.