100 வருஷத்துக்கு முன் சீட் பெல்ட் இருந்த விதமே வேற!! இத்தனை பேரோட உழைப்பு இதுக்கு பின்னாடி இருக்கா…!
இன்றைய மாடர்ன் உலகில், கார்களில் பல்வேறு தொழிற்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. உள்ளே இருக்கும் பயணிகளையும், காரையும் பாதுகாக்கவும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. இவ்வளவு ஏன், சாலையின் ஓரத்தில் நடந்துச் செல்லும் பாதசாரிகளை கூட அடையாளம் கண்டு, அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் இன்றைய கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.
ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் கார்களில் கொண்டுவரப்பட்ட முதல் பாதுகாப்பு வசதி என்று பார்த்தால், அது சீட் பெல்ட் ஆகும். மாடர்ன் கார்களில் இன்று எத்தனையோ அட்வான்ஸ்டு வசதிகள் வந்துவிட்டாலும், இப்போதும் பயணத்தின்போது சீட் பெல்ட் அணிவது அவசியமாக உள்ளது. இத்தகைய அற்புதமான கண்டுப்பிடிப்பை உருவாக்கியவர், சர் ஜார்ஜ் கேலே.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளரான ஜார்ஜ் கேலே விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகளுக்கான சீட் பெல்ட்டை தான் உருவாக்கினார். ஆனால், அது பின்னர் காலத்தில் கார்களிலும் வந்துவிட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில், ஜார்ஜ் கேலே உருவாக்கிய சீட் பெல்ட்கள் மிகவும் எளிமையானவைகளாக இருந்தன. இருப்பினும், திடீர் மோதல்களின்போதும் பயணியை இருக்கையில் இறுக்கி பிடிக்கும் வகையில் இருந்தன.
ஆனால், சீட் பெல்ட்டிற்கான முதல் காப்புரிமையை ஜார்ஜ் கேலே பதிவு செய்யவில்லை. எட்வர்டு ஜே க்ளாகோர்ன் என்ற அமெரிக்கர் 1885ஆம் ஆண்டு பிப்ரவரி 10 (ஆம் இன்றைய தினம் தான்) சீட் பெல்ட்டிற்கான காப்புரிமையை பெற்றார். இந்த வகையில் பார்த்தால், சீட் பெல்ட்டிற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டு சுமார் 139 வருடங்கள் ஆகிவிட்டன.
1885ஆம் ஆண்டு சமயத்தில் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நகரத்தை சுற்றிக் காட்டுவதற்கு குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டது. குதிரை வண்டியின் தேருக்குள் அமரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்துவதற்காக எட்வார்டு ஜே க்ளாகோர்ன் சீட் பெல்ட்டிற்கான காப்புரிமையை பெற்றார். அதாவது, குதிரை வண்டிக்காகவே சீட் பெல்ட்டிற்கான முதல் டிசைன் உரிமையை பெற்றனர்.
அந்த முதல் பதிவு செய்யப்பட்ட சீட்பெல்ட்டில் ஸ்ட்ராப்கள், ஹூக்குகள் மற்றும் பக்கள்ஸ் இருந்தன. இந்த சீட் பெல்ட்டிற்கு, ‘சேஃப்டி பெல்ட்’ என பெயர் சூட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சீட் பெல்ட்ஸ் பரிணாம வளர்ச்சியை அடைய துவங்கின. விபத்தில் இருந்து மட்டுமின்றி, கரடு முரடான சாலைகளில் செல்லும்போதும் பயணிகள் குலுங்குவதை தடுக்கும் விதமாக சீட் பெல்ட்ஸ் உருவாக துவங்கின.
இருப்பினும், 2 பாயிண்ட்களை மட்டுமே கொண்டவைகளாக அன்றைய கால சீட் பெல்ட்கள் இருந்தன. அதாவது, பயணியின் இடுப்பு பகுதியை இருக்கை உடன் இறுக்கி பிடிக்கும் விதமாக மட்டுமே 1900 துவக்கத்தில் உருவாக்கப்பட்ட சீட் பெல்ட்களும் இருந்தன. சீட் பெல்ட்களுக்கான தேவை மக்களிடையே வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. கார்கள் புதிய புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த சமயத்தில், நிறைய பேர் சீட்பெல்ட் உடன் காரை வாங்க விரும்பினர்.
இருப்பினும், அதன்பின் நீண்ட நாட்களுக்கு காரில் சீட்பெல்ட்டை கூடுதல் ஆப்ஷனாகவே கார் நிறுவனங்கள் வழங்கின. அடிப்படை கார் பாகமாக வழங்கப்படவில்லை. 1930- 40ஆம் காலக்கட்டத்தில் சீட் பெல்ட்களினால் நிறைய உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாக பதிவுகள் பதிவாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, 1950ஆம் காலக்கட்டத்தில் சில கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் சிம்பிளான லேப் பெல்ட்களை வழங்க ஆரம்பித்தன.