யார் இந்த ஆகாஷ் தீப்? ஆர்சிபி வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானது எப்படி?
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரரான ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப்பிற்கு முதல் முறையாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் ஒருநாள் தொடரில் விளையாட ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்கா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆகாஷ் தீப் விளையாடி வந்தார். அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து லயன்ஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அந்த 3 போட்டிகளில் இந்திய ஏ அணி சார்பாக களமிறங்கிய ஆகாஷ் தீப் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் இருமுறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக் கூடிய அளவிற்கு பேட்டிங்கையையும் ஆகாஷ் தீப் கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக இந்திய தேர்வு குழு இவரை கவனித்து வந்த நிலையில், திடீரென ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் பெங்கால் அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆகாஷ் தீப், இதுவரை 29 போட்டிகளில் விளையாடி 103 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடிய பவுலர் என்பதால், பும்ராவுக்கு உதவியாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கெட் லைன் மற்றும் லெந்தில் வீசி வரும் ஆகாஷ் தீப்பின் தேர்வு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணிக்காக ஆடி வரும் முகேஷ் குமாரும் பெங்கால் அணியை சேர்ந்தவர் தான். தற்போது பெங்கால் அணியில் இருந்து மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். 3 டெஸ்ட் போட்டிகளில் பும்ராவுக்கு ஏதேனும் ஒரு போட்டியில் ஓய்வு வழங்கப்படும் பட்சத்தில், ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.