நோ பாலிடிக்ஸ்… ஒன்லி சினிமா; ஏர்போர்டில் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை அள்ளிவிட்ட ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள மொய்தீன் பாய் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
வேட்டையன் பட்த்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஆந்திரா செல்ல சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், லால் சலாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
பின்னர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வர உள்ளது குறித்து ரஜினியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு அரசியல் பற்றிய கேள்விகள் வேண்டாம் என கேட்டுக்கொண்ட ரஜினியிடம் அவர் நடித்து வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும், இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளதாக கூறினார்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படம் குறித்த அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கும் என கூறிவிட்டு சென்றார். ரஜினி தன் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளதல் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.