திடீர் நெஞ்சுவலி… நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1980 காலக்கட்டத்தில் புகழ்பெற்ற இந்தி நடிகராக வலம் வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் தமிழில் ‘குரு’, ‘யாகாவராயினும் நாகாக்க’ ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தி, பெங்காலி, ஒடியா, போஜ்புரி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 350 படங்களில் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி-யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் இவரும் சிக்கினார். அதைத் தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார்.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக மிதுன் சக்கரவர்த்தி அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
73 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தி சமீபத்தில் ‘டான்ஸ் பங்களா டான்ஸ்’ என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார். கடந்த மாதம் குடியரசு தலைவர் வழங்கிய பத்ம பூஷண் விருது பெற்ற 17 பேரில் மிதுன் சக்கரவர்த்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.