ஹேர் டிரையர் பயன்படுத்திய பெண்ணிடம் ரூ.1 லட்சம் கேட்ட ஹோட்டல் நிர்வாகம்.. பகீர் சம்பவம்!
சுற்றுலா நிமித்தமாக அல்லது அலுவலக வேலை நிமித்தமாக ஓரிரு நாட்கள் வெளியூருக்கு செல்கின்ற நாம் அங்கே ஹோட்டலில் அறை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். அவ்வாறு தங்கச் செல்லும் போது ஹோட்டல் நிர்வாகத்தினர் நம்மிடம் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக் கொள்வார்கள்.
நம்முடைய வேலையை முடித்துக் கொண்டு ஹோட்டல் அறையை நாம் காலி செய்யும்போது நம் கணக்கில் என்னென்ன பில் தொகை சேர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு கூறி மொத்த தொகையை பெறுவார்கள். பெரும்பாலும் ஹோட்டலில் இல்லாமல் வெளியிடத்தில் இருந்து நாம் பெறுகின்ற லாண்டரி, உணவு டெலிவரி போன்ற சேவைகளுக்காக கூடுதல் கட்டணம் வசூல் செய்வார்கள்.
அதிலும் நாம் பெறுகின்ற சேவைக்கும், ஹோட்டல் நிர்வாகம் விதிக்கும் கட்டணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்போது நாம் மிகுந்த அதிர்ச்சி அடைவோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இத்தகைய சிக்கலில் அண்மையில் மாட்டியுள்ளார்.
கெல்லி என்ற இந்தப் பெண், நோவோட்டல் பெர்த் லாங்லே என்ற ஹோட்டலில் அண்மையில் அறை எடுத்து தங்கினார். அப்போது ஹேர் டிரையர் பயன்படுத்தியதற்காக ஹோட்டல் நிர்வாகம் இவருக்கு 1400 டாலர்கள் பில் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.10 லட்சம்.
இவ்வளவு பெரிய தொகை பில்லில் சேர்க்கப்பட்டதற்குப் பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. முதலில் இந்த ஹோட்டலில் தங்குவதற்காக 240 டாலர்களை கட்டணமாக இவர் செலுத்தியிருந்தார்.
ஹோட்டலில் இருந்தபோது ஹேர் டிரையரை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது அங்கிருந்த சென்சாரில் தவறான சிக்னல் கிடைத்து தீ விபத்து எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர்.
அலாரம் ஒலி தவறான சிக்னல் காரணமாக எழுந்துள்ளது என்பதை தீயணைப்புத் துறையினர் உறுதி செய்தனர். எனினும், அந்த தவறுக்கு கெல்லி பயன்படுத்திய ஹேர் டிரையர் தான் காரணம் என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், 3 நாட்கள் கழித்து அவர் அறையை காலி செய்தபோது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து தோராயமாக ரூ.1.10 லட்சம் பணத்தை கட்டணமாக ஹோட்டல் நிர்வாகம் பிடித்தம் செய்தது. தீயணைப்புத் துறையினர் வந்து சென்றதற்காக 1337 டாலர்கள் என்றும், அலாரத்தை ஒலிக்கச் செய்த தவறுக்காக 63 டாலர்கள் என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கு கெல்லி எதிர்ப்பு தெரிவித்தபோது, இதெல்லாம் நிபந்தனை மற்றும் விதிமுறைகளில் அடங்கும் என்று ஹோட்டல் நிர்வாகம் உறுதியாக கூறிவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தன்னுடைய மனக்குமுறலை கெல்லி எடுத்துரைத்தார். இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகம் கூடுதலாக பிடிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.