IND vs ENG : கனவெல்லாம் பலிக்குதே.. 3வது டெஸ்டில் சர்பராஸ் கான் அறிமுகம்? ஒரேயொரு சிக்கல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2வது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக விலகிய ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஃபிட்னஸை எட்டினால் களமிறங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 4ல் ஆடி வந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரஜத் பட்டிதர் 4வது இடத்தில் களமிறங்கும் பட்சத்தில் 5வது இடத்தில் களமிறங்க சர்பராஸ் கான் மட்டுமே உள்ளார். இதனால் 3 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஆயிரக்கணக்கான ரன்களை குவித்து வந்த சர்பராஸ் கான், இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
இருப்பினும் சர்பராஸ் கான் அறிமுகமாவதில் சிக்கல் ஒன்று உள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரரான கேஎல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்தால், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கேஎல் ராகுல் என்சிஏவில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை. அவர் பிப்.15ஆம் தேதிக்குள் முழு ஃபிட்னஸை எட்டுவாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தான் தேர்வு குழுவும் சந்தேகத்துடன் கேஎல் ராகுல் பெயரை அறிவித்துள்ளது.