12 வருடங்களில் 3 போட்டிகள்.. 13 வருடத்தில் முதல் முறை.. இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு
இந்த அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறி இருக்கிறார். அதே சமயத்தில் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவிந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.
கேஎல்.ராகுல் வருகையின் காரணமாக புதிதாக இளம் வீரர்கள் யாரையும் அணியில் சேர்க்க தேவை இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் ரகானே மற்றும் புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் தேவையில்லை என்கின்ற இடத்திற்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வந்திருப்பது தெளிவாகிறது.
இந்த அணி அறிவிப்பில் மிக முக்கியமாக விராட் கோலியின் பெயர் இடம் பெறவில்லை. அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். தற்போது மொத்தமாகவே தொடரை விட்டு விலகி இருக்கிறார்.
விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக இந்த தொடரில் விளையாடவில்லை என்பது ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. ஆனால் என்ன மாதிரியான காரணம் என்பது குறித்து இன்னும் கூறப்படவில்லை.
ஆனாலும் கூட இந்திய வீரர்கள் மட்டும் இல்லாது வெளிநாட்டு வீரர்களும் விராட் கோலியின் முடிவை மதிக்க வேண்டும், குடும்பமே எப்பொழுதும் முக்கியமானது என தொடர்ந்து விராட் கோலிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து எந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் முழுமையாக தவறவிட்டதே கிடையாது. 13 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு முழு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அவர் தவற விடுகிறார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னாடைவாகவும் பார்க்கப்படுகிறது.