இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது..!
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜ கோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது.
இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.
மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார்.
இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.
சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது.