திருப்பதியில் இந்த 3 நாட்கள் தரிசனங்கள் ரத்து…!
ரத சப்தமி விழாவை விமரிசயைக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது.
ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் வலம் வருவார்.
இந்நிலையில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சில தரிசனங்களை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதன்படி, ரத சப்தமி விழாவை முன்னிட்டு திருமலையில் மூன்று நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக தலைவர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ரத சப்தமி நாளில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், மற்றும் கை குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் இந்த மூன்று நாட்கள் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் அதற்கு ஏற்றது போல் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.