சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நெல்… விவசாயம் செழிக்கும்… மக்கள் மகிழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அமைந்துள்ளது சிவன்மலை. இந்த மலையில் வீற்றிருக்கும் சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வீற்றிருக்கும் முருக பெருமான், காலகாலமாக அந்த பகுதியில் உள்ள பக்தர்களின் கனவில் தோன்றி, ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.
அவ்வாறு முருகன் கனவில் சொன்ன தகவல்களை அந்த பக்தர் கோவல் நிர்வாகத்திற்கு தெரிவிப்பதும், அதனை பூ போட்டு முருகனிடம் சம்மதம் கேட்கும் முறைக்கு பின்னர், நடத்தி முடிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறு வைக்கும் பொருட்களை அப்பகுதியினர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுகின்றனர். இந்த தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு மட்டுமே உரியது.
இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருட்கள் எதிர்மறை மற்றும் நேர்மறையாக சமூகத்தில் பிரதிபலித்திருக்கிறது என்கிறார்கள் அந்த கிராம மக்கள். அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். மறு உத்தரவு வரும் வரை பழைய பொருளே பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள், நம்மை சுற்றி ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது ஐதீகம். இது நாள் வரை அப்படியே பிரதிபலித்திருக்கிறது.
2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதேபோல் நடப்பாண்டில் 3 வருடம் கழிந்து தை அமாவாசை தினமான நேற்று ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் நிறைபடி நெல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டு நெல் தொடர்பான தாக்கம் ஏற்படலாம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.