காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் பலி
காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதுச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடைசி ஹமாஸின் கோட்டை
குறிப்பாக இஸ்ரேல், ரஃபா மீது படையெடுத்திருப்பது மனிதாபிமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதேவேளை “நான்கு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போரில் காசாவில் எஞ்சியிருக்கும் கடைசி ஹமாஸின் கோட்டையே இந்த எகிப்தின் எல்லையான ரஃபாதான்” என்று இஸ்ரேல் கூறுகிறது.
நான்கு மாதங்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.