இந்திய பாதுகாப்பிற்கு எதிரான ஆய்வுக் கப்பல்கள் எதையும் அனுமதிக்க மாட்டோம்: ஜனாதிபதி ரணில்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆய்வுக்கப்பல்கள் எதனையும் தமது நாடு அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள விக்ரமசிங்கவிடம், சீனக் கப்பல்களின் வருகையை அனுமதிக்காத இலங்கை அரசின் முடிவு குறித்து கேட்டபோது, எந்த நாட்டிலிருந்தும் கப்பல்கள் வரக்கூடாது என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் வருகைக்காக வரும் கடற்படைக் கப்பல்களாக இருந்தால், அவை அனுமதிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சீனா முயற்சிப்பதாகக் கூறப்படும் கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க, “சீனக் கப்பல்கள் இலங்கைக்கு நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கின்றன.
எனினும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முயற்சிக்கவில்லை, இந்தியாவுடன் இலங்கை இணக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் கூறுகின்றனர் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முறையான உடன்படிக்கைகள்
இதன்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, 2024 ஜூன் மாதத்திற்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்கவுள்ளதாக விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடன், முறையான உடன்படிக்கைகளை எட்டிய பின்னர், இலங்கை மற்ற அனைத்து கடன் வழங்கும் நாடுகளுடனும் முறையான ஒப்பந்தங்களுக்கு வரமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின்போது இந்தியாவின் ஆதரவு இருந்திருக்காவிட்டால், இலங்கையர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.