U19 World Cup Final : 6 ஆவது முறையாக மகுடம் சூடி வரலாறு படைக்குமா இந்தியா
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ஆறாவது முறையாக மகுடம் சூடி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 19 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஜோகனஸ்பர்க் அருகேயுள்ள பெனோனி மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்புச் சாம்பியன் என்ற பெருமிதத்துடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து 5 ஆவது முறையும், ஓட்டுமொத்தத்தில் 9 ஆவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு தொடர்களிலும் இந்தியாவே வாகை சூடியதால், மூன்றாவது முறையும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், 2010-க்குப் பிறகு முதல்முறையாக பட்டம் வெல்ல ஆஸ்திரேலிய அணியும் கங்கணம் கட்டியுள்ளது. கடந்த ஆண்டு சீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியுற்றது, இதற்கு பரிகாரமாக ஜூனியர் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, ரசிகர்களை குஷிபடுத்துமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.