கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை..!
கர்நாடக தும்கூர் மாவட்டம் சேர்ந்தவர் மாரியப்பா (47). இவர் மோதூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், குல்லி நஞ்சய்யன்பாளையத்தில் பண்ணையில் மாரியப்பாவின் உடல் வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குனிகல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஏஎஸ்பி மாரியப்பா, குனிகல் டிஎஸ்பி ஓம்பிரகாஷ், இன்ஸ்பெக்டர் நவீன் கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாரியப்பாவின் தலை மற்றும் தோள்பட்டையில் பல முறை ஆயுதங்களால் வெட்டப்பட்டிருந்த காயங்கள் இருந்தன. அத்துடன் ஓட ஓட விரட்டி அவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த கொலை குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண்ணையைச் சுற்றித் திரண்டனர்.
தனிப்பட்ட விரோதத்தின் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து குனிகல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரியப்பாவுடன் கிராமத்தில் யாருக்கும் விரோதமிருக்கிறதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.