குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு..!
டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது நாட்டின் ஒரு சட்டம். தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிளவுபட்டபோது, அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளானதை அடுத்து, அவர்களை இந்தியா வரவேற்பதாகவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தக் கட்சி பின்வாங்குகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது புதிதாக குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தானே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. ஆனால், நமது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம் எதுவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லை. வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகள் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ளன” என தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மத சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தவர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரில் டிசம்பர் 31, 2014-க்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றப்பட்டது. எனினும், இந்தச் சட்டத்தை அமல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, சட்டத்தை அமல்படுத்தும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.