மும்பை இந்தியன்ஸ் அணியை சீண்டிய ரோஹித் சர்மா.. கேப்டன் பதவி விவகாரத்தில் வலுக்கும் மோதல்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத ரோஹித் சர்மா, முதன் முறையாக தன் மனைவிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சீண்டி இருக்கிறார்.
கடந்த 2023 நவம்பர் மாதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் ரோஹித் சர்மா அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டோ, எதிர்த்தோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.
எனினும், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிரி அணியாக வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவை லைக் செய்து இருந்தார். அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த பேட்டிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
அந்தப் பேட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்ம் வீழ்ந்து விட்டதால் அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கி இருக்கிறோம். அவர் கேப்டன் பதவி இல்லாததால் குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்ற காரணத்தால் அதை ஏற்றுக் கொண்டார் என கூறி இருந்தார். அந்தப் பேட்டியில் உண்மை இல்லை எனக் கூறும் வகையில் ரித்திகா, அந்தப் பேட்டியில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
அதனால் பரபரப்பு எழுந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா தன் மனைவியுடன் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு “எப்போதும் என் பக்கம் இருப்பவர்” எனப் பதிவிட்டு இருந்தார். இதன் மூலம் அவர் சூசகமாக தன் மனைவி ரித்திகா மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளருக்கு தந்த பதிலடியை தானும் ஆதரிப்பதாக கூறி இருக்கிறார். அந்த வகையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மறைமுகமாக தன் முதல் கருத்தை பதிவு செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா.