கெஞ்சி கேட்கிறேன் விராட் கோலி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட டிவில்லியர்ஸ்.. வீடியோவில் செய்த தவறு
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா குறித்து தவறான தகவலை கூறி விட்டதாக இரண்டாவது முறையாக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகிய போது எதனால் அவர் விலகி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மேலும், பிசிசிஐ தனது அறிக்கையில் விராட் கோலி சார்பாக, அவரது விலகல் குறித்து யாரும் ஊகித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில், ஏபி டிவில்லியர்ஸ் தனது யூட்யூப் வீடியோ ஒன்றில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகவும், அதனால் அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருவதாகவும் கூறி இருந்தார். ஆனால், அடுத்த நாள் அந்த வீடியோவை அவர் நீக்கி இருந்தார். பின்னர் தான் தவறான தகவலை கூறி விட்டதாக விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டு இருந்தார்.
தற்போது விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி இருக்கிறார். இதை அடுத்து டிவில்லியர்ஸ் கூறிய தகவலை வைத்து பலரும் சமூக ஊடகங்களில் விவாதம் செய்து வருகின்றனர். அதனால், மீண்டும் ஒரு வீடியோவில் தனது தகவல் தவறு என்று கூறியதோடு, விராட் கோலி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் டிவில்லியர்ஸ்.
இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “எனது நண்பர் விராட் கோலி இப்போதும் போட்டிகளில் ஆட தயாராகவில்லை. அவருக்கு வேண்டிய தனிமையை அளிக்குமாறு அனைவரிடமும் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில். என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாது. எனது முந்தைய வீடியோவில் நான் பெரிய தவறை செய்து விட்டேன். அதற்காக விராட் கோலி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார் ஏபி டிவில்லியர்ஸ்.