பட்டப்பகலில் ஆப்பிள் ஸ்டோரில் 40 ஐபோன்கள் திருட்டு – வைரலான வீடியோ

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஒன்றில் பட்டப்பகலில் 40 ஐபோன்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.
இந்த விடியோ முதலில் டிக்டாக் தளத்தில் வெளியானது. அந்த ஐபோன் ஸ்டோரில் இருந்த மூன்று டேபிள்களில் டிஸ்பிளேயில் வைக்கப்பட்டிருந்த ஐபோன்களை திருடன் வையருடன் கனெக்ட் செய்யப்பட்டதை பிடுங்கி பேன்டுக்குள் வாரிப்போட்டுக் கொண்டு சுருட்டினான். அதை அங்கிருந்த ஊழியர்களால் தடுக்க முடியவில்லை.
திருடிய ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்துவைத்து உடனடியாக அங்கிருந்து அந்தத் திருடன் வெளியேறினான். இதில் கொடுமை என்னவென்றால் கடையின் வெளியிலேயே போலீஸ் வாகனம் இருந்தது என்பது தான்.
சம்பவத்தில் திருடுபோன ஐபோன்களின் மதிப்பு ரூ.40,86,000 எனத் தெரிகிறது. திருடிய ஐபோன்களுடன் அந்தத் திருடன் தனது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளான்.
இந்த திருட்டு நடைபெற்ற சமயத்தில் ஐபோன் ஸ்டோருக்கு மிக அருகில் எமரிவில்லி போலீஸ் வாகனம் நின்று கொண்டிருந்தது. இதையும் மீறி இந்தத் திருட்டு நடைபெற்றதால் போலீஸாரின் திறமை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடியோ வைரல் ஆனபோது சம்பவம் ஓக்லாந்தில் நடைபெற்றதாகக் கருதப்பட்டது. ஆனால் ஓக்லாந்தில் ஐபோன் ஸ்டோர்கள் எதுவும் இல்லை. திங்கள்கிழமை நடைபெற்ற இந்த திருட்டு குறித்து எமரிவில்லி போலீஸார் உடனடியாக செய்தி வெளியிட்டனர்.
அத்துடன் சம்பவம் நடைபெற்ற போது அங்கு நின்றிருந்த போலீஸ் காரில் யாரும் இல்லை. அந்தக் கார் வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் அந்தச் சமயத்தில் அதில் இல்லை. அதில் இருந்தவர்கள் வேறு எங்காவது ரோந்துப் பணியில் ஈடுபடச் சென்றிருக்கலாம்.
அவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இந்தத் திருட்டை தடுத்து நிறுத்தியிருப்பார்கள் என்று விளக்கமும் அளித்துள்ளனர். இதனிடையே இந்தத் திருட்டில் ஈடுபட்டவர் 22 வயதான டைலர் மிம்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் மீது திருட்டுச் சதி பற்றி மூன்று பிரிவுகளிலும், கொள்ளை தொடர்பாக மூன்று பிரிவுகளிலும் திட்டமிட்டு கடையில் களவாடியது பற்றி மூன்று பிரிவுகளிலும் என ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை போலீஸார் கைது செய்து வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இத்துடன் மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களது விவரங்கள் தெரியவில்லை. மூன்று பேரையும் டப்ளினில் உள்ள சான்டா ரயில் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர்.