GPAY, PhonePE செயலிகள் காத்திருக்கும் ”டைம் பாம்”- மக்களவையில் குற்றச்சாட்டு
அண்மைகாலமாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் யுபிஐ பண பரிமாற்றங்கள் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பயன்படுத்த எளிதாக இருப்பது, கையில் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை போன்ற காரணங்களால் மக்களும் சரி, வியாபாரிகளும் சரி இவ்வகை பரிமாற்றங்களை தங்களின் விருப்பமான பணப் பரிமாற்ற முறைகளாக பயன்படுத்துகின்றனர்.
மக்களவையில் விவாதம்: மக்களவையில் இந்திய பொருளாதாரத்தின் மீதான வெள்ளை அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை முன் வைத்தனர்.
விவாதத்தில் பங்கேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, அண்மையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை சுட்டிக்காட்டி பேசினார்.
பேடிஎம்மில் நிகழ்ந்தது பண மோசடி போன்றது என கூறிய சுப்ரியா சுலே, இதைப் போலவே போன்பே, கூகுள் பே ஆகிய இரண்டும் வெடிக்க காத்திருக்கும் டைம் பாம்கள் என கூறினார். அரசின் பீம் செயலியை குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பயன்படுத்துகின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், அரசு டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் கேஷ் லெஸ் பொருளாதாரத்தை சரி செய்ய என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பினார்.
கூகுள் பே, போன்பே ஆதிக்கம் குறித்து கவலை: கடந்த வியாழக்கிழமை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வெளியானது. அதில் நாட்டில் யுபிஐ முறை பணப் பரிமாற்றங்களில் வெளிநாட்டு ஃபின்டெக் நிறுவனங்களான கூகுள் பே, போன்பே ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது குறித்து கவலை தெரிவித்திருந்தது.
2023ஆம் ஆண்டில் நடந்த யுபிஐ பரிமாற்றத்தில் 82% இந்த இரண்டு செயலிகளில் தான் நடந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
போன்பே செயலி வால்மார்ட்டுக்கு சொந்தமானது, அதே போல கூகுள் பே செயலில் ஆல்பபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஃபின்டெக் நிறுவனங்கள் பணமோசடிக்கு பயன்படுத்தப்படுகின்றன என கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டில் உருவாக்கப்படும் யுபிஐ செயலிகளை ஊக்குவிக்க வேண்டும் அதன் பயன்பாட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து கூகுள் பே, போன்பே குறித்து சுப்ரியா சுலே தெரிவித்த கருத்துகளும், யுபிஐ பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற வாதத்திற்கு வலு சேர்த்துள்ளது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி கூட கூகுள் பே, போன்பேவின் ஆதிக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனிடையே யுபிஐ பயன்பாடுகளுக்கு சந்தையில் 30% உச்சவரம்பு விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.