ஒரு டஜன் மாம்பழம் விலை ரூ.5000..! சீசன் துவக்குவதற்கு முன்பே ஷாக்..!!

நம் நாட்டில் கோடைக்காலம் தொடங்கும் போது மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட மாம்பழ ரகம் பிரபலமாக இருக்கிறது.

மல்கோவா, அல்போன்சா என அனைத்து வகையான மாம்பழங்களும் அதன் ருசிகளுக்கு பேர் போனவை. அப்படி கோவாவில் மன்குராட் ரக மாம்பழம் பிரபலமானது. இப்போது அந்த மாம்பழத்திற்கு தான் மவுசு அதிகரித்துள்ளது.

மன்குராட் ரக மாம்பழத்திற்கு மவுசு: மாம்பழ சீஸன் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கோவா நகர சந்தைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கிவிட்டன. அங்கு, மன்குராட் மாம்பழம் இப்போதே விற்பனைக்கு வந்திருப்பதால் மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் விலை தான் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒரு டஜன் மாம்பழம் ரூ.5000 க்கு விற்கப்படுகிறது.

ஏன் இவ்வளவு விலை?: குளிர்காலமே முடியாத நிலையில் மிக சொற்ப எண்ணிக்கையில் தான் மன்குராட் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளன. அதே வேளையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு டிமாண்டும் அதிகமாக இருப்பதால் ஒரு டஜன் மாம்பழம் ரூ.5000முதல் ரூ.7000 வரை விற்கப்படுகிறது என்கின்றனர் வியாபாரிகள்.

பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழம் வரத்து அதிகரிக்கும் என்றும், படிப்படியாக விலை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீசன் தொடங்க ஒரு மாதம் முன்னதாகவே மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விலை அதிகமாக இருந்தாலும் ஏப்ரல் மாதம் விலை சீரடைந்துவிடும் என பனாஜி நகர மாம்பழ வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது கோவாவின் பிசோலிம் தாலுகாவில் இருந்து மட்டுமே மாம்பழம் வர ஆரம்பித்துள்ளது, மற்ற பகுதியில் இருந்து பழங்கள் வர ஆரம்பித்துவிட்டால் விலை குறைய ஆரம்பித்துவிடும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மன்குராட் மாம்பழங்களுக்கு ஏன் மவுசு?: மன்குராட் ரக மாம்பழங்கள் அதன் தனித்துவமான ருசிக்கு பெயர் போனவை. மேலும் அதிக சதைப்பற்று கொண்டவை. எனவே கோவாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் பெட்டி பெட்டியாக இந்த பழத்தை வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டு மன்குராட் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது. கோவாவில் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் போது இவ்வகை மாம்பழங்கள் சாகுபடி செய்வது தொடங்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *