கார் செயல்பாட்டிற்கு அதிகம் பவர் எங்கிருந்து கிடைக்கிறது..? – BHP Vs WHP இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்..
புதிய கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நமக்கு பிடித்த மாதிரி மாடலாக இருக்க வேண்டும், நமக்கு ஏற்ற மைலேஜ் தர வேண்டும், பாதுகாப்பு வசதிகள் நன்றாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கார் பற்றி யார் பேசினாலும் ‘BHP’ என்ற வர்த்தையை குறிப்பிடுவார்கள். நமது கார் இஞ்சின் எவ்வளவு பவரை உற்பத்தி செய்கிறது என்பதை குறிக்கும் வார்த்தையே BHP. இதை வைத்து நம் கார் இஞ்சின் எந்தளவிற்கு வலிமையானது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு காரின் இஞ்சின் பவருக்கு ஏற்றார்ப் போல் அதன் BHP அளவீடும் மாறும். புதிதாக கார் வாங்க விரும்புகிறவர்கள் BHP பவரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். நமது கார் இஞ்சின் உற்பத்தி செய்யும் அதே பவர், காரின் இயங்கு சக்தியாக உள்ள வீல்களுக்கு முழுதாக கிடைக்காது. இங்குதான் வீல் ஹார்ஸ் பவர் அல்லது WHP வார்த்தை பயன்பாட்டுக்கு வருகிறது. உங்கள் காரின் வீல்களுக்கு எவ்வளவு பவர் சென்றடைகிறது என்பதை அளவிடுவதே WHP. சுருக்கமாக சொன்னால் இஞ்சினின் வலிமை உண்மையாகவே எந்தளவிற்கு காரின் வீல்களுக்கு கிடைக்கிறது என்பதே WHP. ஆனால் இந்த வார்த்தையை நாம் இதுவரை எங்குமே கேட்டிருக்க மாட்டோம். பொதுவாக கார் வாங்கும் யாருமே BHP-யை தான் முக்கியமாக பார்ப்போம். இது என்ன WHP, புதுசாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.
BHP மற்றும் WHP இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். காரின் இஞ்சின் மற்றும் வீல்களுக்கு இடையே கியர்பாக்ஸ், க்ளட்ச், ட்ரான்ஸ்மிஸன் எனப் பல்வேறு பாகங்கள் இருக்கின்றன. இந்த பாகங்களே கார் நகர்வதற்கு உதவுகின்றன. ஆனாலும் இடைபட்ட நேரத்தில் சில காருக்கு கிடைக்கக் கூடிய பவர் குறையக்கூடும். இஞ்சின் உற்பத்தி செய்யும் அனைத்து பவர்களும் முழுதாக வீல்களை சென்றடையாது. ஆகையால் எப்போதும் காரின் இஞ்சின் தயாரிக்கும் பவரை (BHP) விட வீல்களுக்கு கிடைக்கும் பவர் (WHP) சற்று குறைவாகவே இருக்கும்.
ஆனால் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பலருக்கும் தெரியாது. ஏனென்றால் பெரும்பாலும் கார் நிறுவனங்கள் இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் கூறுவதில்லை. கார்களின் விளம்பரங்களில் கூட அவர்கள் இஞ்சின் பவரையே (BHP) குறிப்பிடுவார்கள். ஆனால் உங்கள் காரை இயக்கும் உண்மையான பவர் WHP-ல் தான் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே, அடுத்த முறை புதிய கார் வாங்குவதாக இருந்தால் அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது புதிய கார் வாங்குவதாக இருந்தால், காரின் BHP பவரை மட்டும் பார்க்காமல் WHP பவரையும் செக் செய்யுங்கள். உங்கள் காரின் உண்மையான பவர் WHP-ல் தான் உள்ளது என்பதை மறவாதிர்கள்.