தம்பி இதான் லாஸ்ட் வார்னிங்.. இளம் வீரரை கடுமையாக எச்சரித்த அணி நிர்வாகம்.. 3வது டெஸ்ட்டில் கண்டம்
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்றுள்ள கே எஸ் பாரத் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ரன் குவிக்கவில்லை. அவர் விக்கெட் கீப்பிங் திறமைக்காக தேர்வு செய்யப்பட்டாலும் குறைந்தபட்சம் 35 – 40 ரன்களாவது சராசரியாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது இந்திய அணி நிர்வாகம்.
ஆனால், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 41, 28, 17 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதாவது 4 இன்னிங்ஸ்களில் சராசரியாக 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கில் செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு 8 ரன்கள் கிடைத்தன. மேலும், ஒரு எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை தவற விட்டார்.
இதை அடுத்து இந்திய அணி நிர்வாகத்தால் அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே எஸ் பாரத் ரன் குவிக்கவில்லை என்றால் இந்த தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் துருவ் ஜுரேல் அணியில் இடம் பெறுவார்.
ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே எஸ் பாரத் அரைசதம் அடித்தால் மட்டுமே தப்ப முடியும் என்ற நிலையில் இருக்கிறார். முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். அவரை இனி டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட்டில் ரன் குவிக்கவில்லை என்றால் அதே நிலை கே எஸ் பாரத்துக்கும் ஏற்படலாம். துருவ் ஜுரேல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் ரிஷப் பண்ட்டுக்கு இணையாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது.