133 டன் சிக்கனைத் திருடி லேப்டாப், டிவி வாங்கிய கும்பல்! கியூபாவில் நூதன திருட்டு!
கியூபாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், 133 டன் கோழிக்கறியைத் திருடி, விற்பனை செய்ததாக 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் ஆலையில் பணிபுரியும் ஷிப்ட் முதலாளிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பில்லாத வெளியாட்களும் அடங்குவர். சந்தேகிக்கப்படும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், கியூபா நாட்டுச் சட்டப்படி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை கியூபா அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தியின்படி, தலைநகர் ஹவானாவில் உள்ள அரசு கிடங்கில் 1,660 பெட்டிகளில் இருந்த இறைச்சியை திருடர்கள் எடுத்துச் சென்று விற்றனர் என்றும் விற்பனையில் கிடைத்த பணத்தை வைத்து பிரிட்ஜ், லேப்டாப், டிவி, ஏசி போன்ற மின் சாதனங்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சியைத் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி தொடர்கிறது. அங்கு ரேஷன் மூலம் குடிமக்களுக்கு கோழிக்கறி விநியோகிக்கப்படுகிறது. மானிய விலையில் உணவை வழங்குகிறது இந்த அமைப்பு கியூபாவில் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளது.
COPMAR என்ற அரசு உணவு விநியோக அமைப்பின் இயக்குனரான ரிகோபர்டோ மஸ்டெலியர் கூறுகையில், “திருடப்பட்ட இறைச்சி தற்போதைய விநியோக விகிதத்தில் நடுத்தர அளவிலான ஒரு மாகாணத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான கோழி இறைச்சிக்குச் சமம்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்குப் பற்றாக்குறைக்கு நிலவுகிறது. இதனால், சமீப ஆண்டுகளில் ரேஷன் மூலம் கிடைக்கும் கோழிக்கறியின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தத் திருட்டு தொடர்பாகப் பேசியுள்ள அதிகாரிகள், நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணிக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில் குளிர்பதனக் கிடங்கில் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களை அவர்கள் கவனித்துள்ளனர். கோழிக்கறியைத் திருடி லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்வது சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயின் முடிவில் இருந்து பொருளாதார நெருக்கடியுடன் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. இருப்பினும் இதுபோன்ற பெரிய திருட்டுகள் பற்றிய தகவல்கள் அரிதாகவே வெளிவந்துள்ளன.