Mahaan 2: விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் மகான் 2.. தளபதி 69 இயக்குநர் ரேஸில் மாற்றம்?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகாத நிலையில், மகான் இரண்டாம் பாகம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் மகான் கூட்டணி
சீயான் விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் மகான். விக்ரம் உடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருந்தார். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த மகான், 2022ம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரித்த மகான் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என விஜய் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த மகான் படத்தில் விக்ரம் நடிப்பு தாறுமாறாக இருந்தது. விக்ரம் கேரியரில் மிக தரமான படமான மகான் இப்போதும் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேபோல் சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்திருந்தது. மகான் ரிலீஸுக்குப் பின்னர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்திருந்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதுபற்றி அபிஸியலாக இன்னும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், விஜய் தனது அரசியல் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து தளபதி 69 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் வெற்றிமாறன், அட்லீ, ஹெச் வினோத், வம்ஷி பைடிபல்லி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
எனவே இதுவரை யார் தளபதி 68 படத்தின் இயக்குநர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் தான் மகான் இரண்டாம் பாகம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். விக்ரம், துருவ் என அதே கூட்டணியில் மகான் 2ம் பாகம் உருவாகவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இந்த முறை மகான் 2 கண்டிப்பாக திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தங்கலான் படத்தில் நடித்து முடித்துவிட்ட விக்ரம் தற்போது ‘சீயான் 62’ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். இது முடிந்ததும் மகான் 2ம் பாகம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது சந்தேகமே என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.