சுவாமி நாராயண் கோவிலை திறந்து வைக்க 13-ம் தேதி யூஏஇ செல்கிறார் பிரதமர் மோடி
2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு சென்றிருந்தபோது, அபுதாபியில் உள்ள சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்காக பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு 2019-ல் கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இதையடுத்து, 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த கோவில் இளஞ்சிவப்பு ராஜஸ்தானி மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய பளிங்கு ஆகியவற்றால் ஆனது.கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன.நிலநடுக்கம் மற்றும் அதிக வெப்பத்தில் இருந்து கோயிலைப் பாதுகாக்க கோயிலுக்கு அடியில் 100 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்வாமி நாராயண் கோவில் போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பாப்ஸ்) என்பவரால் கட்டப்பட்டது.
இந்த கோவிலை திறப்பதற்காக பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.அபுதாபியில் அமைந்துள்ள முதல் இந்து கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.