இந்த உலகக்கோப்பை நாயகன் இல்லாமல் இந்திய அணியால் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வெல்லவே முடியாது
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. கடந்த 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை என இரண்டு முறை ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இதை அடுத்து இந்திய அணியால் உலகக்கோப்பை அரை இறுதி, இறுதிப் போட்டி போன்றவற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தவே முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் உள்ள வரலாறை எடுத்துப் பார்த்தால் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே மூன்று முறை ஆஸ்திரேலிய அணியை நாக் அவுட் சுற்றில் காலி செய்து இருக்கிறார். அவர் இருந்ததால் மட்டுமே இந்திய அணி இரண்டு உலகக்கோப்பைகளை வென்றது. அது வேறு யாருமல்ல யுவராஜ் சிங் தான்.
இன்றைய தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றிகளில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தது மட்டுமே தெரியும். ஆனால், 2000மாவது ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன யுவராஜ் சிங் அப்போதே ஐசிசி நாக் அவுட் என்ற தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த காரணமாக இருந்தார்.
அந்தப் போட்டியில் 80 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால், அப்போது படுமோசமான நிலையில் இருந்த இந்திய அணி, ஒரு தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி புத்துணர்ச்சி அடைந்தது. அதன் பின்னரே கங்குலி தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் பெரும் புரட்சி துவங்கியது.
அடுத்து 2007 டி20 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் அதுவரை இரண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகளை தொடர்ந்து வெற்றி பெற்று கெத்தாக வந்து நின்ற ஆஸ்திரேலிய அணியை 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்து துவம்சம் செய்தார் யுவராஜ் சிங். அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா வென்று முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.
அடுத்து 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் கால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆல் – ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் 57 ரன்கள் மற்றும் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்தியா அந்தப் போட்டியில் வென்று, பின் 2011 உலகக்கோப்பையையும் வென்றது.
அதன் பின் யுவராஜ் சிங் ஐசிசி தொடர்களில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாமல் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணி, அதன் பின் 2015, 2019 மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகளில் அரை இறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. இதை வைத்துப் பார்த்தால் இந்திய அணிக்கு யுவராஜ் சிங் போன்ற ஒரு மேட்ச் வின்னர் தேவை.