தமிழ் தலைவாஸ்-ஐ புரோ கபடியில் இருந்தே தூக்கி எறிந்த டாப் டீம்.. பிளே-ஆஃப் வாய்ப்பு எல்லாம் காலி
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் செல்ல இருந்த சிறிய வாய்ப்பையும் துடைத்து தூக்கி எறிந்து இருக்கிறது இந்த சீசனின் நம்பர் 1 அணியான புனேரி பல்தான்.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 10 தோல்விகளை பெற்றது. அதன் பின் சுதாரித்து எழுந்து 19 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றாலும், புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களுள் இடம் பெற்று பிளே-ஆஃப் செல்லும் கனவு ஊசலாடிக் கொண்டே இருந்தது.
தனது கடைசி மூன்று லீக் போட்டிகளில் வெற்றி பெற்று, வேறு சில அணிகள் தோல்வி அடைந்தால் பிளே – ஆஃப் செல்லலாம் என்ற நிலையில் புனேரி பல்தான் அணியை சந்தித்தது தமிழ் தலைவாஸ். புனேரி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மட்டுமே மாறி மாறி இடம் பெற்ற அணி என்பதால் கடினமான போட்டி என்ற மனநிலையில் தான் ஆடியது தமிழ் தலைவாஸ்.
இந்தப் போட்டியில் ரெய்டுகளில் சொதப்பிய தமிழ் தலைவாஸ் மிக மோசமாக தடுமாறியது. அதே சமயம், முதல் பாதியில் தடுப்பாட்டம் முந்தைய போட்டிகளை விடவும் சிறப்பாக இருந்தது, ஆனால், ரெய்டுகளில் புள்ளிகளே எடுக்காமல் போனதால் ரெய்டர்களே களத்தில் இல்லாமல் தடுமாறியது தமிழ் தலைவாஸ்.
ஆட்ட நேர முடிவில் புனேரி 56 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 29 புள்ளிகளும் பெற்றன. மோசமான தோல்வியை சந்தித்த தமிழ் தலைவாஸ் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. மறுபுறம் புனேரி பல்தான் அணி 19 போட்டிகளில் 14 வெற்றிகள் பெற்று 81 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றது.