ஐ.நா தலைமையகத்திற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதைகள்
காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டதோடு இதற்கான மின்சார விநியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள்
ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பானது ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்த பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பானது இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.
இந்த சுரங்கபாதை அரை கிலோமீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட இஸ்ரேல் இராணுவம் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளது.
காசாவின் குறுக்கே பல கிலோமீட்டர் சுரங்கப்பாதைகளை கட்டியதை ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.