வெளிநாடொன்றில் தங்கச்சுரங்க கிராமத்தில் 54 பேர் பலி! மேலும் பலர் புதைந்திருக்கலாம் என அச்சம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கச்சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பயங்கர நிலச்சரிவு
தெற்கு பிலிப்பைன்ஸின் Davao de Oro மாகாணத்தில் உள்ளது மசாரா மலை கிராமம். கடந்த சில மாதங்களாக இங்கு கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இந்த கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அச்சமயம் தங்கச்சுரங்க தொழிலாளிகள் இரண்டு பேருந்துகளில் வீடுகளுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.
அவர்களும், ஊர் மக்களும் என 100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 63 பேரை காணவில்லை என முதலில் கூறப்பட்டது.
54 பேர் பலி
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.
ஆனால், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அச்சம் ஆகியவற்றால் தேடுதல் பணி தடைப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறும்போது 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவர்களின் பாதுகாப்பிற்காக வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
அத்துடன் சமீபத்திய மாதங்களில் நிலநடுக்கங்களால் இப்பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.