தயவு செய்து முருகனை காப்பாற்றுங்கள் : தமிழக அரசுக்கு நளினி கடிதம்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான 142 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், புழல் சிறையிலிருந்து விடுதலையான ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதனால், இவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல, முருகன், ராபர்ட் பயாஸ் ஆகியோர், தங்களை போலீஸார் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. எனவே, விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்,காவல் ஆணையர் என்.காமினி ஆகியோருக்கு முருகனின் மனைவி நளினி கடிதம் எழுதிஉள்ளார்.
அதில், “நானும், எனது கணவர் முருகனும் கடந்த 11.11.2022-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.அவர் சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டாலும், காவல் துறைகட்டுப்பாட்டில்தான் உள்ளார்.அவர் முன்பு இருந்த வேலூர் சிறையைவிட, திருச்சி சிறப்புமுகாம் கொடுமையாக உள்ளது.
எனது கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால், உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, என் கணவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் நளினி தெரிவித்துள்ளார்.