இனி டீக்கடைகளில் அச்சிட்ட பேப்பரில் பஜ்ஜி விற்க கூடாது..!
உணவகங்கள், தேனீர் கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தில் உணவுப் பொருட்கள், வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்ற உணவகங்களை பார்சல் செய்துபொதுமக்களுக்கு வழங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட பேப்பரில் உணவுப் பொருட்களை பார்சல் செய்து வழங்குகின்றனர். எங்களுக்கு வந்த தகவலையடுத்து ஆய்வு செய்து வருகிறோம். செய்தித் தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது கொஞ்சம், கொஞ்சமாக விஷத்தை உண்பதற்கு சமம். உலோக அசுத்தங்களும் தீங்கு விளைவிக்கக்கூடிய தாலேட் என்ற வேதிப்பொருள் கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில பொட்டலமிடப்படும் உணவில் காணப்படுவதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களிலும் செய்தித்தாள் மற்றும் அது தொடர்பான பொருட்களை பொட்டலமிடவோ உண்பதற்கோ வழங்ககூடாது. இவ்வாறு கூறினர்.