பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..

நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மீண்டும் கோகிலா படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானவர் பெப்சி விஜயன். பிரபல சண்டை பயிற்சியாளராக மாஸ்டர் சாமிநாதனின் மகன் தான் இவர். எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு சாமிநாதன் தான் ஸ்டண்ட் மாஸ்டர். குறிப்பாக அடிமை பெண் படத்தில் வரும் புலி சண்டைக்காக இவர் பிரபலமானார். மேலும் எம்.ஜி.ஆரின் நன்மதிப்பையும் சாமிநாதன் பெற்றிருந்தார்.

தனது தந்தையை போலவே பெப்சி விஜயனும் ஸ்டண்ட் மாஸ்டராக தனது திரைப் பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கும், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையின் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

பின்னர் நடிகரகாக மாறிய அவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக தில், பாபா, வில்லன், கிரி, தாஸ், வில்லு, ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மற்றும் தமிழில் ஓரிரு படங்களை இயக்கி உள்ளார்.

மேலும் விஜயன் தென்னிந்திய திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பான FEFSI-ன் தலைவராக இருந்தார்.. அதன் பிறகே அவர் பெப்சி விஜயன் என்று அழைக்கப்பட்டார். சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இவரின் ‘டேய் டேய் டேய்’ என்ற காமெடி பிரபலமானது.

இந்த நிலையில் பெப்சி விஜயனின் தாயார் கோகிலா இன்று காலை காலமானார். அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *