லீக், சூப்பர் சிக்ஸ் என்று எல்லாமே வெற்றி – ஃபைனலில் தோல்வி : ஆஸ்திரேலியாவிடம் சிக்கிய சீனியர் அண்ட் ஜூனியர்!
தென் ஆப்பிரிக்காவில் அண்டர்19 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே ஆஸ்திரேலியா 253 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய இந்தியா அண்டர் 19 அணிக்கு தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் மட்டுமே அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். கடைசியாக முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக 43.5 ஓவர்களில் இந்தியா அண்டர்19 அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா 4ஆவது முறையாக அண்டர்19 உலகக் கோப்பையில் சாம்பியனானது. இதற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று சாம்பியனானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று எல்லாவற்றிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வசமாக சிக்கி தோல்வியோடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதுவரையில் ஆஸ்திரேலியா 6 முறை உலகக் கோப்பை டிராபி, 4 முறை அண்டர்19 உலகக் கோப்பை டிராபி, 2 முறை சாம்பியன்ஸ் டிராபி, ஒரு முறை டி20 உலகக் கோப்பை, ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று மொத்தமாக 14 டிராபிகளை ஆஸ்திரேலியா ஆண்கள் அணி கைப்பற்றியுள்ளது.