Paytm வீழ்ச்சி.. கேப்பில் கெடா வெட்டும் போட்டி நிறுவனங்கள்..!!
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கின் செயல்பாட்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முழுமையான தடை விதித்துள்ளது. இதனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இது தவிர பேடிஎம் செயலி பயன்பாட்டில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளது. பேடிஎம் பேமெண்ட் பேங்க் செயல்பாட்டுக்கு தான் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது, பேடிஎம் யுபிஐ செயலியை வழக்கம் போல பயன்படுத்த முடியும். இருப்பினும் குழப்பம் காரணமாக வாடிக்கையாளர்கள் பலர் வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.
ஏற்கனவே பல கடைகளில் பேடிஎம் ஸ்டிக்கர், ஸ்பீக்கர் பாக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பெரும்பாலான கடைகளில் பேடிஎம் பேமெண்ட்களை ஏற்பதில்லை என கூற துவங்கியுள்ளனர். இதை பலரும் கவனித்திருக்க கூடும். இந்த நிலையில் பேடிஎம் வீழ்ச்சி மற்ற நிறுவனங்களுக்கு எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளது என நீங்களே பாருங்க.
பேடிஎம் சிக்கல் யாருக்கு லாபம்?: பேடிஎம் செயலி பயன்பாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற யுபிஐ செயலிகளை நாட தொடங்கியுள்ளனர். எனவே போன்பே, கூகுள்பே மற்றும் பீம் செயலிகள் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
செயலிகள் பதிவிறக்கம் தொடர்பாக தகவல்களை தரும் ஏப்ஃபிகர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி போன் பே செயலியானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி 2.79 லட்சம் ஆண்டிராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி 1.92 லட்சமாக இருந்த நிலையில் ஒரு வாரத்தில் 45% அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பீம் செயலி பதிவிறக்கம் 21.5% அதிகரிப்பு: NPCIஇன் பீம் செயலியானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி 1.35 லட்சம் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை ஜனவரி 27ஆம் தேதி 1.11 லட்சமாக இருந்துள்ளது.பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தடைக்கு பிறகு இந்த செயலியின் பதிவிறக்கம்21.5% அதிகரித்துள்ளது.
ஒரு வாரத்தில் அதாவது ஜனவரி 24 – 27 வரையிலான வாரத்தில் 3.97 லட்சமாக இருந்த பதிவிறக்கம் அடுத்த வாரம் 50% அதிகரித்து 5.93 லட்சமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
ஆனால் கூகுள் பே செயலியானது பிப்ரவரி 3ஆம் தேதி 1.09 லட்சம் பேரால் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய வாரம் அதாவது ஜனவரி 27இல் அந்த எண்ணிக்கை 1.04லட்சமாக இருந்தது.
வாடிக்கையாளர்களை இழந்த பேடிஎம்: பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீதான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
பிப்ரவரி 3ஆம் தேதி பேடிஎம் செயலி ஆண்டிராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படும் எண்ணிக்கையானது 68,391ஆக குறைந்துள்ளது. அதாவது ஜனவரி 27ஆம் தேதி 90,039ஆக இருந்து 24% குறைந்துவிட்டது என தரவுகள் தெரிவிக்கின்றன.