டெக் ஊழியர்களின் தூக்கம் தொலைந்தது.. பயமுறுத்தும் AI.. 2024ல் 136% அதிக பணிநீக்கம்..!
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. மனிதர்களின் பல்வேறு பணிகளை இந்த தொழில்நுட்பம் எளிதாக்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால் இதுவே மனிதர்களின் வேலைகளுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நீடிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் , தொழில்நுட்ப துறைகளில் ஊழியர்களும் பணி நீக்கமும் அதிகரிக்க வண்ணமே இருக்கிறது.
2024இல் ஊழியர்கள் பணிநீக்கம் 136% உயர்வு: தொழில்நுட்ப துறையில் 2024ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு மாத காலத்திற்குள் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது 136% அதிகரித்துள்ளது. அதாவது 82,000 ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்பட்டுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குழப்பங்கள், வருவாய், பொருளாதார சூழல் ஆகியவை காரணமாக நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக வேலையாட்களை குறைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு துறைகளுக்கு சிக்கல்: பொருளாதார சரிவு ஒரு புறம் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றின் வளர்ச்சியும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. சேலஞ்சர் கிரே எனப்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வினை நடத்தியது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வைட் காலர் பணிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்ற தலைப்பில் நடந்த ஆய்வில் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்கும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
புரோகிராமர்ஸ், நிறுவன மேலாண்மையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்ஸ், காப்பீடு துறை, நிதி சார்ந்த பணிகளுக்கு எல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சவாலை ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
82,307 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் ஜனவரி மாதத்தில் 82,307 ஊழியர்களை லே ஆஃப் என்ற பெயரில் பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது கடந்த மாதத்தை விட 136 % அதிகம் என தெரிய வந்துள்ளது.
ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்த துறையாக ஃபைனான்சியல் துறை உள்ளது. சுமார் 23,000 ஊழியர்கள் இந்த துறை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இது தான் இந்த துறையின் உச்சபட்ச எண்ணிக்கை . அடுத்ததாக தொழில்நுட்ப துறை 15,806 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக ஆட்டோமேஷன் என்பது அதிகரித்துள்ளது. அதாவது ஒரே மாதிரியான திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகளை தொழில்நுட்பமே செய்துவிடுவதால் அந்த பணிக்கு மனிதர்கள் தேவையில்லை என நிறுவனங்கள் நினைக்கின்றன.
இதனிடையே, உணவு பொருட்கள் உற்பத்தி துறையிலும் கடந்த மாதம் 6 ஆயிரத்து 656 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிக்கன நடவடிக்கை காரணமாக சொல்லப்படுகிறது.
செய்தி ஊடகங்களிலும் ஜனவரி மாதத்தில் 528 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அது அமெரிக்காவில் இத்துறையில் கடந்த ஓராண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.