ஸ்பைஸ்ஜெட் எடுத்த தடாலடி முடிவு.. பைலட், பணிப்பெண்கள் கடும் சோகம்.. என்ன நடக்கிறது..?!
இந்தியாவில் முன்னணி விமான நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவிலான விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் சமீபத்தில் தான் ஸ்பைஸ்ஜெட் பெரும் தொகையை முதலீடாகத் திரட்டியது.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இண்டிகோ மட்டுநே சுமார் 60 சதவீத வர்த்தகப் பங்கீட்டைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து டாடா தலைமையிலான ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா பிரான்டுக்கு கிட்டதட்ட 30 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, குறிப்பாக உள்நாட்டு விமானப் பணிகள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைப் பணமாக்கிக்கொள்ளும் மெகா திட்டத்துடன் இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை தனது சேவை அளிக்கும் நகரங்களை விரிவாக்கம் செய்வதோடு தலா 400 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது.
இந்த விமானங்களை இயக்க அதிகப்படியான பைலட், பணிப்பெண்கள் தேடும் பணிகள் நடந்து வரும் வேளையில் ஸ்பைஸ்ஜெட் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது ஒட்டுமொத்த ஏவியேஷன் துறையைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதற்கு மத்தியில் இந்தப் பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தின் மீதான முதலீட்டாளர் நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள, செலவின குறைப்பு நடவடிக்கையை ஸ்பைஸ்ஜெட் கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்த ஊழியர்களில் சுமார் 15 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம்.
இந்த முடிவைத் தொடர்ந்து சுமார் 1400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் சுமார் 9000 ஊழியர்களைக் கொண்டு 30 விமானங்களை இயங்கி வருகிறது, இதில் 8 விமானங்களை வெளிநாட்டு விமான நிறுவனத்திடம் பைலட் மற்றும் பணிப்பெண்கள் என மொத்த டீம்-ஐ குத்தகை முறையில் இயக்கி வருகிறது.
இந்தப் பணிநீக்கம் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 60 கோடி ரூபாய் சம்பள செலவில் கணிசமான சேமிப்பு உருவாகும். ஸ்பைஸ்ஜெட் தற்போது தனது முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2200 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.