அம்பயரே என்ன இதெல்லாம்.. ரன் அவுட் செய்தும் அவுட் கொடுக்காத அம்பயர்.. எகிறிய ஆஸ்திரேலிய வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அல்சாரி ஜோசப்பை ரன் அவுட் செய்த போதும், அம்பயர் ரன் அவுட் கொடுக்கவில்லை. அதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் கோபத்தில் பொங்கினர். ஆனால், அவுட் எல்லாம் கொடுக்க முடியாது. போய் விளையாடுங்கள் என அம்பயர் கூறினார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை அடுத்து டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 241 ரன்கள் குவித்தது. கிளென் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்து மிரட்டி இருந்தார். அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி ஆட்டம் ஆடிய போதும் விக்கெட்களை இழந்தது. 18 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 189 ரன்கள் எடுத்து இருந்தது. 12 பந்துகளில் 53 ரன்கள் தேவை என்ற நிலையில் 11வது வரிசையில் அல்சாரி ஜோசப் களமிறங்கி இருந்தார்.
19வது ஓவரின் மூன்றாவது பந்தை அடித்த அல்சாரி ஜோசப் ஒரு ரன் ஓடினார். அப்போது ஆஸ்திரேலியா அவரை ரன் அவுட் செய்தது. ஆனால், அல்சாரி ஜோசப் கிரீஸுக்குள் வந்ததாக எண்ணிய ஆஸ்திரேலிய வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை. அதனால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அடுத்த நிமிடத்தில் மைதானத்தில் இருந்த திரையில் அல்சாரி ஜோசப் க்ரீஸுக்குள் வரவில்லை என்பது காட்டப்பட்டது. அதைப் பார்த்த உடன் ஆஸ்திரேலிய வீரர்கள் அம்பயரிடம் இது அவுட் தானே ஏன் அவுட் கொடுக்கவில்லை என கேட்டனர்.
அதற்கு அம்பயர் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அவுட் கேட்கவில்லை. விதிப்படி அவுட் கேட்டால் மட்டுமே அவுட் கொடுக்க வேண்டும் என கூறினார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் தான் அவுட் கேட்டதாக அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் அவருடன் சேர்ந்தனர். ஆனால், அம்பயர் அவுட் எல்லாம் கொடுக்க முடியாது. ஆட்டத்தை தொடருங்கள் என கூறி விட்டார்.
எப்படியும் ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகே இருந்ததால் பின்னர் சமாதானம் ஆகி ஆட்டத்தை தொடர்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த விவகாரம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.